ADDED : ஜன 12, 2026 06:43 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி பகுதியை குப்பை கொட்டும் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
மக்களின் தேவைக்காக ஆங்காங்கே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கப்படுகிறது.
வைகை ஆற்றங்கரையில் உள்ள திருப்பாச்சேத்தியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமங்களில் ஆங்காங்கே பல இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திருப்பாச்சேத்தியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து அழிக்க போதிய இடவசதி இல்லை. இதனால் கிராமத்தின் பல்வேறு இடங்களை குப்பை கிடங்காக ஊராட்சி நிர்வாகம் மாற்றி வருகிறது.
படமாத்துார் ரோட்டில் அழகிய நாயகி அம்மன் கோயில் அருகே தொடர்ந்து குப்பைகளை கொட்டி தீ வைத்ததில் சிமென்ட் மின்கம்பம் எரிந்து கற்கள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
அதே இடத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வந்தது.
அந்த இடத்தில் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டியதால் யாரும் தண்ணீர் பிடிக்க முடியாமல் நிரந்தர குப்பை கிடங்காக மாறிவிட்டது.
பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க முடியாததால் கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். பலமுறை உள்ளாட்சி அமைப்புகளிடம் புகார் அளித்தும் குப்பை கொட்டுவதை நிறுத்தவே இல்லை.
