/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்கப்படுமா
/
நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்கப்படுமா
நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்கப்படுமா
நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்கப்படுமா
UPDATED : மார் 05, 2025 11:37 AM
ADDED : மார் 05, 2025 06:17 AM

நெற்குப்பை பேரூராட்சி அந்தஸ்து கொண்ட நகர். அதன் எல்லைக்குள் 8 ஊர்கள் உள்ளன. மேலும் நெற்குப்பை நகரைச் சுற்றிலும் துவார்,வேலங்குடி, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் உள்ளிட்ட கிராமத்தினர் பத்திரப்பதிவிற்கு பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு செல்கின்றனர்.
அங்குள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பொன்னமராவதி பகுதி கிராமங்கள் மட்டுமின்றி, திருப்புத்துார் ஒன்றியப் பகுதி கிராமங்கள், எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்தவர்களும் செல்கின்றனர். அதிகமான பதிவு நடப்பதால், நெற்குப்பையிலிருந்து பதிய செல்பவர்கள் பொன்னமராவதியில் பல நாட்கள் சென்று காத்திருந்து பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும் பதியச் செல்லும் போது தேவையான நில ஆவணங்களுக்கு அவர்கள் திருப்புத்துார் வர வேண்டியுள்ளது. இதே போன்று தெக்கூர் பகுதியினர் 14 கி.மீ. தூரத்திலுள்ள சிங்கம்புணரிக்கு சென்று பத்திரப்பதிவு செய்கின்றனர்.
வேலங்குடி பகுதியினர் 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புத்துார் சென்று பத்திரப்பதிவு செய்ய வேண்டியுள்ளது. அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்க நெற்குப்பையை சுற்றியுள்ள 10 கி.மீ.க்குள் உள்ள கிராமங்களுக்கு நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்க கோரியுள்ளனர்.
பேரூராட்சி தலைவர் பழனியப்பன் கூறுகையில், நெற்குப்பையில் சார்பதிவாளர் அலுவலகம் துவக்க பல நாட்களாக கோரி வருகிறோம். அதன் மூலம் இப்பகுதியினர் வீண் அலைச்சல் குறையும்.
சிங்கம்புணரிக்கு பதிய செல்லும் பக்கத்து கிராமங்களையும் இணைக்கலாம். இதனால் விரைவாக பதிவு செய்ய முடியும். இப்போது நான்கு நாட்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் பயன்பெறும்.' என்றார்.
தெக்கூர் குமார் கூறுகையில், எங்களுக்கு ஒன்றியம்,தாலுகா எல்லாமே திருப்புத்துார் தான். பத்திரபதிவு மட்டும் சிங்கம்புணரி செல்ல வேண்டியுள்ளது.
பதிவுக்குப் பின் பட்டாமாறுதலுக்கு திருப்புத்துார் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தெக்கூர் உள்ளிட்ட இப்பகுதி கிராமங்களையும் சேர்த்து நெற்குப்பையில் புதிய பத்திரவுப்பதிவு அலுவலகம் துவக்கினால் நல்லது. நேரம்,பணம் விரயமாவது குறையும்' என்றார்.