/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் வருவாய் கோட்ட அலுவலகம் துவக்கப்படுமா? சான்றிதலுக்காக மக்கள் அலையும் அவலம்
/
திருப்புத்துாரில் வருவாய் கோட்ட அலுவலகம் துவக்கப்படுமா? சான்றிதலுக்காக மக்கள் அலையும் அவலம்
திருப்புத்துாரில் வருவாய் கோட்ட அலுவலகம் துவக்கப்படுமா? சான்றிதலுக்காக மக்கள் அலையும் அவலம்
திருப்புத்துாரில் வருவாய் கோட்ட அலுவலகம் துவக்கப்படுமா? சான்றிதலுக்காக மக்கள் அலையும் அவலம்
ADDED : நவ 19, 2025 06:58 AM

திருப்புத்துார்: திருப்புத்துார், சிங்கம்புணரி தாலுகாவைச் சேர்ந்த நில விவரங்கள் மேல்முறையீடு, பிறப்பு இறப்பு சான்று பதிவு நன்னடத்தை வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் மக்கள் நீண்ட தூரம் செல்வதை தவிர்க்கவும் திருப்புத்துாரில் வருவாய் கோட்ட அலுவலகம் துவங்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் முன்பு 6 தாலுகாக்கள் இருந்த போது சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் வருவாய் கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டன. தற்போது சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்துார் மற்றும் சிங்கம்புணரி என ஒன்பது தாலுகாக்களாக அதிகரித்தும் கூடுதல் கோட்ட அலுவலகங்கள் துவக்கப்படவில்லை.
தேவகோட்டை கோட்ட அலுவலகத்தில் நான்கு தாலுகாவிற்குட்பட்ட 190க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களிலிருந்து தினசரி நுாற்றுக் கணக்கான மனுக்கள் குவிகிறது.
இதனால் கோட்ட அலுவலகத்தில் அதிகரிக்கும் வேலை பளுவால் மக்களின் மனுக்கள் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
திருப்புத்துார் தாலுகாவிலிருந்து முதலில் காரைக்குடி, அதன் பின்னர் சிங்கம்புணரி தனித் தாலுகா துவக்கப்பட்டது.
1989ல் எஸ்.புதுார் தனி ஒன்றியம், சிங்கம்புணரி தனித்தாலுகா பிரிப்பு குறித்து திட்டமிட்டபோது, திருப்புத்துாரில் கோட்டாட்சியர் அலுவலகம் துவக்குவது குறித்தும் வருவாய்த்துறையினரால் திட்டமிடப்பட்டது.
தற்போது சிங்கம்புணரி தனித்தாலுகாவாக பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும்,திருப்புத்துாரில் கோட்ட அலுவலகம் துவக்குவது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் திருப்புத்துார், சிங்கம்புணரி பகுதி எல்லைக் கிராமங்கள், எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டா, நத்தம் பட்டா,யு.டி.ஆர்., குறித்த மேல்முறையீடு, பதிவு செய்யாத பிறப்பு,இறப்பு சான்றிதழ், விதவை, எஸ்.டி., சான்று உள்ளிட்டவை பெற, 2,3 பஸ்கள் மாறி தேவகோட்டை செல்ல வேண்டியுள்ளது. இதே போன்று விசாரணை அலுவலர்களின் காலமும் பயணத்தில் விரயமாகிறது.
தற்போது தேவகோட்டை கோட்ட அலுவலகத்தில் திருப்புத்துார், சிங்கம்புணரி நிலம் சம்பந்தமாக மேல்முறையீடு மனுக்களே அதிகமாக விசாரணைக்கு உள்ளன. இந்த மனுக்களின் விசாரணையை வேகப்படுத்த திருப்புத்துாரில் புதிய கோட்ட அலுவலகம் அமைத்தால் உதவியாக இருக்கும்.
கிராம நிர்வாக அலுவலர் தரப்பில் கூறுகையில், குறிப்பாக இறப்பு பதிவு போன்ற சான்றுக்கு கள விசாரணை முக்கியம். அதற்காக பலமுறை விசாரிக்கப்படும் போது காலம் அதிகரிக்கும்.
கோட்ட அலுவலகம் அருகில் இருந்தால் மனுக்கள் மீதான விசாரணைக்கு பொதுமக்கள், அலுவலர்கள் விரைவாக சென்று திரும்ப முடியும்.
நீண்ட துாரம் என்பதால் எஸ்.புதுார் விவசாயிகள் தங்கள் ஒரு நாள் வேலையை இழக்கின்றனர். அது போல அலுவலர்களுக்கு ஒரே நாளில் 2 மனுக்கள் விசாரிக்கப்பட்டால் வழக்கமான பணியை கிராமத்தில் செய்ய நேரம் இல்லாமல் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருப்புத்துாரில் ஆர்.டி.ஓ.அலுவலகம் துவக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மனுக்கள் மீதான நடவடிக்கை வேகம் எடுக்கும்' என்றார்.

