/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழிவிலிருந்து திருப்புத்துார் கண்மாய்கள் பாதுகாக்கப்படுமா? 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தொடர்கிறது
/
அழிவிலிருந்து திருப்புத்துார் கண்மாய்கள் பாதுகாக்கப்படுமா? 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தொடர்கிறது
அழிவிலிருந்து திருப்புத்துார் கண்மாய்கள் பாதுகாக்கப்படுமா? 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தொடர்கிறது
அழிவிலிருந்து திருப்புத்துார் கண்மாய்கள் பாதுகாக்கப்படுமா? 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தொடர்கிறது
UPDATED : ஜூன் 25, 2025 10:04 AM
ADDED : ஜூன் 25, 2025 08:37 AM

திருப்புத்துார் சிவகங்கை ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடுத்துள்ளது கிருஷ்ணன் ஏந்தல். இக்கண்மாய் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. தற்போது இக்கண்மாய் மூலம் விவசாயம் ஏதும் நடைபெறவில்லை. பராமரிப்பின்றி உள்ள இக்கண்மாய் கரை பலவீனமடைந்து செடிகள் வளர்ந்து மடைகள் மூடி உள்ளது. வரத்துக்கால்வாய்கள் துார்ந்து கண்மாயில் மழைநீர் சேகரிப்புக்கும் வழி இல்லை.
இதே போல், அதே ரோட்டில் அடுத்து உள்ளது பனியாரனேந்தல் கண்மாய். இதில் தான் கோர்ட்,துணை மின்நிலையம், பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு பகுதி கண்மாய் பயன்பாட்டில் உள்ளது. தற்போது எஞ்சிய பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. கரைகள் பலப்படுத்தப்படாமல், மடைகள், வரத்துக் கால்வாய்கள் பராமரிப்பின்றி மழை நீர் தேக்க முடியாமல் உள்ளது. இதே நிலையில் முருகுடி ஏந்தலும் உள்ளது.
அடுத்து காயான் கண்மாய் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் நகர் மக்கள் அதிகமானோர் குளிக்க பயன்படுத்திய கண்மாய். தற்போதும் ஓரளவு நீர் தேங்கி வருகிறது. ஆனால் கண்மாய் கரைகள் பராமரிப்பின்றி பலவீனமாகி விட்டது. கரையோரம் செடிகள் மண்டி ஆக்கிரமிப்பும் துவங்கி விட்டது. இந்த மூன்று கண்மாய்களும் பாசனத்திற்கு பயன்படவில்லை.
நிலத்தடிநீர் வளம் பெற உதவும் இக்கண்மாய்களை உள்ளாட்சி நிர்வாகமும் முற்றிலுமாக கைவிட்டு விட்டன. இப்பகுதி மழை நீர் வடிகாலாகவும், நிலத்தடி நீர் செறிவடையவும், சுற்றுச்சூழல் மேம்படுத்த உதவும் இக்கண்மாய்களை பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும்.
மதுரை வண்டியூர் கண்மாய் போன்று மக்களின் நவீன காலப் பயன்பாட்டிற்கு இக்கண்மாய்களை மாற்ற வேண்டும். அதன் மூலமே ஆக்கிரமிப்பிலிருந்தும், அழிவிலிருந்தும் கண்மாய்களை பாதுகாக்க முடியும்.
நகர்ப்புறத்தில் உள்ள 12 கண்மாய்களில் அளவீடு செய்து எல்லைகளை உறுதி செய்வதுடன் வரத்துக்கால்வாய்கள், மடைகளை பராமரித்து, கரைகளை பலப்படுத்த வேண்டும். கண்மாய்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி, நீரை சேமிக்கும் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். நீரை வெளியேற்றும் கலுங்கு, கரைகளில் படித்துறை, நடைபாதை அமைக்க வேண்டும். கரைகளில் மரங்கள் வளர்த்து பூங்கா, நடைபயிற்சி பாதை மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.