/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் கோட்டைச்சுவர் பாதுகாக்கப்படுமா
/
திருப்புத்துார் கோட்டைச்சுவர் பாதுகாக்கப்படுமா
ADDED : நவ 22, 2024 04:28 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரின் புராதனமான கோட்டைச்சுவரை பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையையும், சோழ நாட்டின் தலைநகரான தஞ்சாவூரையும் இணைக்கும் சாலையில் முக்கிய வர்த்தக தடத்தில் திருப்புத்துார் நகர் இருந்துள்ளது. சங்க காலம் முதல் திருப்புத்துார் உள்ளதை பாரி மன்னன் மீது கபிலர் எழுதிய பாடல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவார பாடலிலிருந்தும் திருப்புத்துார் அப்போதே நகரமாக இருந்தது தெரிகிறது. இந்நகரைச் சுற்றிலும் கோட்டை மதில்கள் இருந்துள்ளன. நான்கு அடி அகலத்தில், சித்து செங்கல் , சுண்ணாம்பு, கருப்பட்டி கலவையில் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு புறம் கோட்டை கதவு மற்றும் அகிழ்கால்வாய் இருந்துள்ளது.
பாண்டிய எல்லை நகரமான திருப்புத்துார் சோழ, பாண்டிய போர்களினால் மாறி,மாறி, சோழர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் இருந்துள்ளது.
பாண்டியர்களின் மிகப்பழமையான கல்வெட்டும் இவ்வூர் திருத்தளிநாதர் கோயிலிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கோட்டை யாரால் கட்டப்பட்டது. அல்லது பல மன்னர்களால் கட்டப்பட்டதா என்பதற்கு சரியான ஆதாரம் ஏதும் தெரியவில்லை. கோட்டைக்கு வெளியே வணிகர்களுக்கான பகுதியும் இருந்துள்ளது.
தற்போதைய கோட்டைக்கருப்பர் கோயில் துவங்கி, அகிழ்மனைத் தெரு, மேலத்தெரு,போஸ்டாபீஸ்தெரு, வழியாக அனுமார் கோயில் பின்னர் திருத்தளிநாதர் கோயில் வடமேற்கு சுற்றுச்சுவர், தற்போது நுாலகம் வழியாக கோட்டைக்கருப்பர் என்று ஓரளவு வட்டவடிவில் கோட்டை இருந்துள்ளது.
வரலாற்று பேராசிரியர் வேலாயுதராஜா கூறுகையில், இந்த கோட்டை போருக்கான ஒரு துணைக் கோட்டையாக இருந்திருக்கலாம்.சிவகங்கை சரித்திரக்கும்மியும் அம்மானையும் என்ற நுால் இக்கோட்டையைப் பற்றி கூறுகிறது.பாண்டிய மன்னர்களின் போர்கால துணைக்கோட்டையாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையின் எச்சங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.' என்றார்.
18 ஆம் நுாற்றாண்டின் இறுதியில் இந்த கோட்டையை கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியுள்ளனர். பின்னர் நடந்த புரட்சியின்போது, மருது பாண்டியர்கள் வெள்ளையர்களிடமிருந்து இக்கோட்டையை மீட்டனர்.
இருப்பினும் மீண்டும் கோட்டையைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் மருது சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வீரர்களை இந்த கோட்டைக்குள் வைத்தே துாக்கிலிட்டுள்ளனர். பின்னர் இந்த கோட்டையை அழித்து விட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அழிந்த இக்கோட்டையின் சுவர்களில் முதன்மையான பகுதி கோட்டைக்கருப்பர் கோயிலில் சில மீட்டர் நீளத்திற்கு உள்ளது.
அதன் பின்னர் அகிழ்மனைத் தெரு, போஸ்டாபீஸ் ரோட்டின் பின்புறம், நுாலகம் பகுதியில் சிறிதளவு உள்ளது. வரலாறு சிறப்பு மிக்க இந்த கோட்டைச்சுவரை சிறிதளவிலாவது தொல்லியல் துறை பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.