/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாராப்பூர் அரண்மனை சீரமைக்கப்படுமா? சிதைந்து வருவதால் கிராம மக்கள வேதனை
/
வாராப்பூர் அரண்மனை சீரமைக்கப்படுமா? சிதைந்து வருவதால் கிராம மக்கள வேதனை
வாராப்பூர் அரண்மனை சீரமைக்கப்படுமா? சிதைந்து வருவதால் கிராம மக்கள வேதனை
வாராப்பூர் அரண்மனை சீரமைக்கப்படுமா? சிதைந்து வருவதால் கிராம மக்கள வேதனை
ADDED : ஏப் 18, 2025 11:50 PM

சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் மருது சகோதரர்களுக்கு ஆதரவாக வாராப்பூர் ஜமீனும் படை பரிவாரங்களுடன் பங்கேற்றது. மருது பாண்டியர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பிறகு, ஏராளமான வீரர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதில் வாராப்பூர் ஜமீன் பொம்மைய நாயக்கரும் ஒருவர்.
நாயக்கர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட ஜமீன்களில் வாராப்பூரும் ஒன்று. இங்கு கோட்டை கொத்தளத்துடன் படை, பரிவாரங்கள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
கடைசி ஜமீனான பொம்மைய நாயக்கருக்கு வாரிசு இல்லாத நிலையில் அவர் நாடு கடத்தப்பட்டு பிறகு அரண்மனை பொலிவிழந்து போனது. பல ஆண்டுகளாக அரண்மனை சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்து வருகிறது.
ஜமீன்தார்கள் வழிபட்டு வந்த சித்தண்ணசாமியை கிராம மக்கள் அரண்மனை கட்டடத்தில் வழிபட்டு வருகின்றனர்.
ஜமீன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில போர் கருவிகள் இங்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த அரண்மனையை சுற்றி பல மீட்டர் தூரத்திற்கு மண்ணுக்கடியில் கொத்தள சுவர்கள் புதைந்து கிடக்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான போரில் சுதந்திர முழக்கத்திற்காக பங்கேற்ற வாராப்பூர் அரண்மனை சிதலமடைந்து வருவது அப்பகுதி மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்டடத்தை பாதுகாத்து, பழமை மாறாமல் புதுப்பிக்கவும் சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பழ.மணிகண்டன், வாராப்பூர்; வரலாற்று பெருமை கொண்ட இந்த அரண்மனையை கிராம மக்களே பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
இவற்றை சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு அனுமதிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதுவரை நடவடிக்கை இல்லை. ஆங்கிலேயருக்கு எதிரான போரின் வரலாற்று ஆவணமான இந்த அரண்மனை கட்டடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

