/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டார் கால்வாயில் தண்ணீர் வருமா
/
நாட்டார் கால்வாயில் தண்ணீர் வருமா
ADDED : டிச 05, 2024 05:55 AM

மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள 16 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மானாமதுரை அருகே கிளங்காட்டூர்,ஏ.நெடுங்குளம்,அன்னவாசல்,எம்.கரிசல்குளம் உள்ளிட்ட 16 கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ள நிலையில் இவர்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது.இந்த கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வந்த நிலையில் பல வருடங்களாக தண்ணீர் வராததால் கால்வாய் துார்ந்து போனது.
வைகையில் தண்ணீர் வரும் போது இந்த கால்வாயில் பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறக்காத காரணத்தால் மேற்கண்ட 16 கிராமங்களிலும் குடிநீர் கூட கிடைக்காமல் பலர் கிராமங்களை விட்டு நகர் பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.
நாட்டார் கால்வாய் பாசன சங்க தலைவர் துபாய் காந்தி கூறியதாவது:16 கிராம விவசாயிகள் விவசாயம் இல்லாமல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து அமைச்சர் பெரிய கருப்பன், எம்.எல்.ஏ., தமிழரசி ஆகியோரிடம் தொடர்ந்து கால்வாயை துார்வாரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு 9.67 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது வைகை ஆற்றில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட 16 கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலையில் பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் வாடி வருவதாலும், குடிநீர் தேவைக்காகவும் பொதுப்பணி துறையினர் நாட்டார் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அன்னவாசல் பகுதியில் நாட்டார் கால்வாய் தூர்வாரும் பணி சர்வே செய்யும் பணியால் பாதிக்கப்பட்டுள்ளதினால் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக சர்வே செய்து தூர்வாரும் பணியையும் விரைவு படுத்த வேண்டும் என்றார்.