ADDED : ஆக 02, 2025 12:40 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சோழம்பட்டியைச் சேர்ந்த பெரியண்ணன் மனைவி லட்சுமி 52. இவர் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு மதுரை ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றார். அவருக்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்த தெரியாததால் ஏ.டி.எம்மில் நின்றிருந்த அறிமுகமில்லாத நபரிடம் கார்டை கொடுத்து ரூ.40 ஆயிரம் எடுக்கச் சொல்லி பின் நம்பரையும் கூறியுள்ளார்.
அவர் ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுத்து விட்டு, பத்து ஆயிரமாகத்தான் எடுக்க முடியும்,எனக்கு வேலை இருக்கிறது என்று கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார்.
அங்கு வந்த வேறு நபரிடம் லட்சுமி ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்க சொல்லியுள்ளார். கார்டை எடுத்து பார்த்த போது அது லெட்சுமியின் கார்டு அல்ல என தெரிந்தது.
இது குறித்து டவுன் போலீசாரிடம் புகார் அளித்து விசாரிக்கையில் அந்த நபர் அந்த கார்டை வைத்து மதுரை ரோட்டிலுள்ள மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.30 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.