ADDED : நவ 28, 2024 05:15 AM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தார்.
திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி லட்சுமி46. இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசிக்கின்றனர். கீழச்சிவல்பட்டி முகவரியில் ரேஷன்கார்டு உள்ளதால், மாதந்தோறும் கீழச்சிவல்பட்டிக்கு வந்து ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். நேற்று முன்தினம் காலை லட்சுமி மட்டும் கீழச்சிவல்பட்டி வந்து ரேஷன் பொருட்கள் வாங்கியுள்ளார். அதன் பின் குறித்த நேரத்தில் அவர் மதுரை வரவில்லை. குடும்பத்தினர் அலைபேசியில் அழைத்த போது அவர் பேசவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்குள்ள உறவினர்களிடம் பேசி லட்சுமியை வீட்டில் பார்க்க கூறியுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் திருநாவுக்கரசின் வீட்டிற்கு சென்று பார்த்த போது லட்சுமி மயங்கி கீழே கிடந்தது தெரியவந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கையில், வீட்டினுள் பாத்ரூம் அருகில் முளைத்திருந்த புற்களை லட்சுமி அகற்றிய போது, அருகிலிருந்து எர்த் கம்பியை பிடித்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து லட்சுமி இறந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.