ADDED : செப் 21, 2024 05:37 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடி நெல்லுக்கு மானிய விலையில் ஜிங்க் சல்பேட் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரில் பரவலாக துத்தநாகம் சத்து பற்றாக்குறை உள்ளது. இதனால், இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடு தோன்றும். சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும்.
இலை பரப்பு குறைந்து மணி பிடிப்பது தாமதமாகும்.
துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அடி உரமாக ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.
மாநில வளர்ச்சி திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.250 மானியத்தில் விவசாயிக்கு தலா ஒரு ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் வேளாண்மை உதவி அலுவலர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நில உடமை சான்று, ஆதார் ஆகியவற்றுடன் சென்று பயன் பெறலாம், என்றார்.