ADDED : ஏப் 27, 2026 12:00 AM

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே ஊத்துமலை புன்னைவனத் தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் 50. விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் இரண்டாவது மகள் சுரண்டை கல்லுாரியில் 3ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.
ஜோசப் ராஜ் தனது தோட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு சென்றிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பிச்சென்றது. ஊத்துமலை விசாரித்தனர்.
முன்விரோதம் ஜோசப் ராஜின் தோட்டத்தில் பராமரிக்கப்பட்ட மாடுகளில் பால் கறப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மதன் 24 அங்கு வந்து சென்றுள்ளார். அவர், ஜோசப் ராஜின் இரண்டாவது மகளை திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஜோசப் ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த மதன் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் மகேஷ் 25, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜோசப் ராஜை தோட்டத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மகேஷ் மற்றும் மணிகண்டனை கைது செய்த போலீசார் தொடர்புடையவர்களை தேடுகின்றனர்.
