/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
அரசு டாக்டர்களிடம் பண வசூல் சர்ச்சையால் விழா ரத்து
/
அரசு டாக்டர்களிடம் பண வசூல் சர்ச்சையால் விழா ரத்து
அரசு டாக்டர்களிடம் பண வசூல் சர்ச்சையால் விழா ரத்து
அரசு டாக்டர்களிடம் பண வசூல் சர்ச்சையால் விழா ரத்து
ADDED : ஏப் 11, 2025 02:01 AM
தென்காசி:''தென்காசி இலத்துார் அரசு மருத்துவமனை கட்டட திறப்பு விழா ரத்து செய்யப்படுகிறது. டாக்டர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ய சொன்ன அதிகாரிகள் மீது இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடக்கிறது ''சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இலத்துாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 15 புதிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடக்க இருந்தது. இதில் அமைச்சர் சுப்பிரமணியம் பங்கேற்க இருந்தார். விழா மேடை அமைக்கவும் இதர செலவுகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசூல் செய்து ஒரு வட்டார மருத்துவர் 10 ஆயிரம் ரூபாய் வீதம் தர வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
ஆனால் இது குறித்து ஒரு ஜூனியர் வட்டார மருத்துவ அலுவலர், சீனியர் டாக்டருக்கு அனுப்பிய ஆடியோ வைரலாகி சர்ச்சையானது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதனிடையே நேற்று காலை துாத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் எந்த அரசு விழாவிற்கு சென்றாலும் பரிசு பொருளாக புத்தகங்களோ சால்வைகளை கூட வாங்காமல் தவிர்க்கிறேன். வெளியே ஓட்டலில் தான் சாப்பிடுகிறேன். சம்பவம் குறித்து இணை இயக்குனர் விசாரணை மேற்கொள்கிறார். மாலையிலேயே முடிவு அறிவிக்கப்படும். தவறிழைத்திருந்தால் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவன்று (ஏப். 11) நடக்க இருந்த கட்டட திறப்பு விழா ரத்து செய்யப்படுகிறது. நான் தென்காசி செல்லவில்லை. இன்னொரு நாளில் விழா நடக்கும் ''என்றார்.
விசாரணை
சென்னை சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் நேற்று தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அரசு மருத்துவமனையில் வைத்து அனைத்து வட்டார மருத்துவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தனும் உடன் இருந்தார்.
மீண்டும் புலம்பல்:
கட்டாய பண வசூலில் ஈடுபடுவது குறித்து ஒரு டாக்டர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதில் உண்மை இருக்கும் பட்சத்தில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் யார் மீது டாக்டர்கள் குற்றம் சொல்கிறார்களோ அவர்களையும் உடன் வைத்துக்கொண்டு நடப்பது முறையான விசாரணை அல்ல. எனவே இதில் எந்த உண்மையும் வரப்போவதில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

