/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரூ.53 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம் டெண்டர் விடாமல் 6 மாதங்களாக முடக்கம்
/
ரூ.53 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம் டெண்டர் விடாமல் 6 மாதங்களாக முடக்கம்
ரூ.53 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம் டெண்டர் விடாமல் 6 மாதங்களாக முடக்கம்
ரூ.53 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம் டெண்டர் விடாமல் 6 மாதங்களாக முடக்கம்
ADDED : செப் 08, 2024 12:01 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த திருவள்ளுவர் தியேட்டரை இடித்து விட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 53 கோடி ரூபாய் மதிப்பில், திருவள்ளுவர் வணிக வளாகம் கட்டப்பட்டது.
வணிக வளாகத்தில், 98,790 சதுரடி பரப்பளவில் நான்கு தளங்கள் கட்டப்பட்டன. இதில், 47 சிறிய கடைகள், மூன்று பெரிய கடைகள், தியேட்டர் கட்டப்பட்டுள்ளன. மேலும், 30 இருசக்கர வாகனங்கள், 130 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம், லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வருவாய் இழப்பு
மேலும், 56 கார்கள் நிறுத்தும் வகையில், ஹைட்ராலிக் வசதியுடன் கார் பார்க்கிங், 15.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தை சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின், பிப்., 24ல் திறந்து வைத்தார்.
வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, ஏலம் நடத்தப்பட்டது. வாடகை அதிகமாக இருந்ததால், உள்ளூர் வியாபாரிகள் பங்கேற்கவில்லை. பெரிய நிறுவனங்கள் மட்டும் பங்கேற்று ஏலம் எடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இருப்பினும், ஏற்கனவே காந்திஜி வணிக வளாகம், புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநாடு அரங்கம், சரபோஜி மார்க்கெட் ஆகிய இடங்களில், ஏலம் முறையாக நடைபெறாததால், மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் திருவள்ளுவர் வணிக வளாகத்தை ஏலம் விடுவதில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால், வளாகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடக்கிறது.
ஏல விவகாரம்
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரான அ.தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன் கூறியதாவது:
இந்த வணிக வளாகம் கட்டடம் கட்டுவதற்கு முன்பே டெண்டர் விடப்பட்டது. வாடகை அதிகம் என்பதால், ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகள் பங்கேற்கவில்லை.
மறைமுகமாக நான்கு பெரிய நிறுவனங்கள் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளன. ஏலம் முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏலம் விட வேண்டும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனால், கடையை ஏலம் எடுத்த நபர்களும் கடைக்கு வரவில்லை. மறு ஏலம் இதுவரை நடைபெறவில்லை. அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மேயர், கமிஷனர், எதிர்க்கட்சிகள் கவுன்சிலர்கள், வருவாய்த் துறையினர், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு என்ற விதிமுறையை பின்பற்றாமல் ஏலம் விவகாரத்தில் மாநகராட்சி நடந்து கொள்கிறது.
இதனால், தான் காந்திஜி வணிக வளாகம், மாநாடு அரங்கம், திருவள்ளுவர் வணிக வளாகம் ஆகியவற்றில் ஏலம் முறையாக நடக்காமல், கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், 6 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இன்னும் ஒரு வாரத்தில் கடைகளுக்கு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.