/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தி.மு.க., நிர்வாகியை கொன்று நாடகமாடிய உறவினர் கைது
/
தி.மு.க., நிர்வாகியை கொன்று நாடகமாடிய உறவினர் கைது
தி.மு.க., நிர்வாகியை கொன்று நாடகமாடிய உறவினர் கைது
தி.மு.க., நிர்வாகியை கொன்று நாடகமாடிய உறவினர் கைது
ADDED : மே 17, 2024 08:55 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுார் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த கலைவாணன்,30,.தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். ஜெயங்கொண்டம் கண்ணன் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஆவார்.
இந்நிலையில், கலைவாணன் கடந்த 12ம் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து பந்தநல்லுார் போலீசார் கலைவாணன் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் எட்டுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, கலைவாணன் மொபைல் போனை தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்த போது, அவரது பெரியப்பா மகன் அருண் பாண்டியன்,32, தான் கடைசியாக பேசிய தெரிந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் அருண் பாண்டியன் மீது திரும்பியது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அருண்பாண்டியன் தனது வீட்டிற்கு தெரியாமல் கலைவாணனிடம் 25 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இருந்தார். ஆனால் வெகுநாட்களாகியும் அவர் பணத்தை கொடுக்கவில்லை.
அதிக தொகை என்பதால், கலைவாணன் திருப்பி கொடுக்கும்படி அடிக்கடி அருண்பாண்டியனிடம் கேட்டுள்ளார். இதில் இருந்து கலைவாணனை திசை திருப்ப அவரது வீட்டில் இருந்த வைக்கோலை அருண்பாண்டியன் இரண்டு முறை தீயிட்டு கொளுத்திவிட்டு வேறு நபர்கள் கொளுத்தியாக நாடகமாடியுள்ளார்.
இருப்பினும் கலைவாணன், அருண்பாண்டியனிடம் பணத்தை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வைக்கோல் போரை சில இளைஞர்கள் தீயிட்டு கொழுத்தியதோடு, தொடரும் என்பதற்கு பதிலாக தெடரும் என சுவரில் எழுதி சென்றனர்.
இதை அருண்பாண்டியன் தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு, கலைவாணனை கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, பயிர? உயிர? தெடரும் என துண்டு சீட்டில் கொலை மிரட்டல் விடுத்து போட்டுள்ளார்.
இதற்கிடையில் அருண்பாண்டியனிடம் கலைவாணன் பணத்தை கேட்ட நிலையில், வீட்டில் கூறி விடுவேன் என கூறியுள்ளார். இதனால் கலைவாணனை தீர்த்துகட்ட அருண்பாண்டியன் முடிவு செய்துள்ளார்.
பிறகு கலைவாணனை வயலுக்கு வர வைத்த அருண்பாண்டியன் இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அருண்பாண்டியன் கலைவாணனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட போதையில் அவர் வயலிலேயே படுத்துவிட்டார். பிறகு தான் மறைத்த வைத்திருந்த அரிவாளால் கலைவாணனை வெட்டிய அருண்பாண்டியன், கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை அருகில் இருந்த வயலில் வீசியுள்ளார்.
பிறகு மறுநாள் காலையில் ஒன்றும் தெரியாதது போல், தனது தம்பியை கொலை செய்வதாக பலர் மிரட்டினார்கள். ஆறுமாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொலை நடந்துள்ளதாக டி.வி.,யில் பேட்டி கொடுத்து அருண்பாண்டியன் நாடகமாடியது தெரிந்தது. அவரை பந்தநல்லுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

