/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்
/
தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்
தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்
தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்
ADDED : மே 24, 2024 05:05 PM

தஞ்சாவூர்: திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் மற்றும் சரக்கு போக்குவரத்தில் தஞ்சாவூர் முக்கிய இடத்தை வகிக்கிறது. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதாக கூறி, 'ஏ.டி.எம்., டெபிட் கார்டுகள், ஜிபே, போன் பே மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு மட்டுமே செய்யலாம்' என ரயில்வே முன்பதிவு செய்யும் பணியில் உள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக, கையால் எழுதப்பட்ட அறிவிப்பு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு ரொக்கமாக பணத்தை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதால், டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி இல்லாத பயணியர் சிரமம் அடைகின்றனர்.
இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:
டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், இந்த வசதி இருந்தால் தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பயணியர் சிரமம் அடைகின்றனர். மேலும் சிலர், தெரிந்தவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அப்படி செய்வதால், ரயில் டிக்கெட் ரத்து செய்யும் போது, டிக்கெட் முன்பதிவு செய்த நபருக்கு பணம் திரும்ப கிடைக்கிறது.
இதனால், பயணியருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் தீர்வு காண வேண்டும் அல்லது பணம் கொடுத்தாலும் பதிவு செய்யலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
இது குறித்து ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது:
டிஜிட்டல் பரிவர்த்தனையை கட்டாயம் பொதுமக்களிடம் ஊக்குவிக்க வேண்டும் என நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அந்த வசதி இல்லாதவர்களிடம் சில நேரங்களில், ரொக்கத்தை பெற்று, டிக்கெட் தருகிறோம். பயணியரை திருப்பி அனுப்புவது கிடையாது.
இவ்வாறு தெரிவித்தனர்.