/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
/
மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
ADDED : மே 06, 2024 11:47 PM
தஞ்சாவூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி, நிலக்கடலை, எள், வாழை, பயறு வகை என, 2 லட்சம் ஏக்கரில் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஆனால், மும்முனை மின்சாரம் முறையாக வினியோகம் செய்யப்படாததால், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் விட முடியாமல் விவசாயிகள் அவதிக்குஉள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், அறிவிப்பு இல்லா மின் தடைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும், விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் விமல்நாதன் தலைமையிலான விவசாயிகள், கண்ணில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல, பந்தநல்லுாரில் ஏராளமான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மின்வாரிய செயற்பொறியாளர்கள் திருவேங்கடம், கலையரசி, 'தினமும் பகலில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர்.