/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
/
மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
ADDED : மே 01, 2024 09:20 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுார் அருகே மரத்துறை பகுதியில், 30,000 ஏக்கரில் கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைக்காததால், பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பனந்தாள் - வைத்தீஸ்வரன் கோவில் சாலையில், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பந்தநல்லுார் போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். அதை ஏற்று விவசாயிகள், மறியலை கைவிட்டு கலைந்தனர். மறியல் போராட்டத்தால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பம்ப் செட் வாயிலாக சாகுபடி மேற்கொள்ள, மும்முனை மின்சாரத்தை நம்பி இருந்தோம். தேர்தலுக்கு முன் முறையாக வழங்கினர். தற்போது மின் தட்டுப்பாடு என்று கூறி மின்சாரம் வழங்கவில்லை.
பகலில் ஆறு மணி நேரமும், நள்ளிரவில் ஆறு மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைத்தாலும், குறைந்தழுத்த மின்சாரமாக இருப்பதால், பம்ப் செட் பழுது ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டி நிலை உள்ளது.
நள்ளிரவு 12:00 மணிக்கு வினியோகம் செய்யப்படும் மும்முனை மின்சாரத்தை இரவு 8:00 மணியிலிருந்து வழங்க வேண்டும். இதனால், பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

