/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஐந்து சென்னை வாலிபர்கள்; 3 பேர் உடல் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்
/
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஐந்து சென்னை வாலிபர்கள்; 3 பேர் உடல் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஐந்து சென்னை வாலிபர்கள்; 3 பேர் உடல் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஐந்து சென்னை வாலிபர்கள்; 3 பேர் உடல் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்
ADDED : செப் 09, 2024 12:59 AM

தஞ்சாவூர் : சென்னை, சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன்கள் பிராங்கிளின், 23, ஆண்டோ, 20, அவரது நண்பர்கள் கிஷோர், 20, சென்னை சோலை பகுதியை சேர்ந்த கலைவேந்தன், 20, ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த மனோகர், 19.
இவர்கள் ஐந்து பேர் உட்பட 18 பேர், தனி வேனில் செப்., 6ம் தேதி நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் அமைந்துள்ள அன்னை மரியா சர்ச்சுக்கு வழிபாட்டிற்காக நேற்று காலை, 7:00 மணிக்கு வந்தனர்.
சர்ச் அருகே சமையல் செய்து கொண்டிருந்த போது, பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகர் ஆகிய ஐந்து பேரும் அருகே இருந்த கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் ஐந்து பேரும் கரைக்கு வராததால், அவர்களுடன் வந்தவர்கள் சென்று பார்த்த போது, கலைவேந்தன், கிஷோர் ஆகிய இருவரும் இறந்த நிலையில் அங்கு மண் திட்டில் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அலறி கூச்சலிட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய மற்ற மூவரையும் தேடினர்.
விசாரணை
திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் என, 40க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்கு பின், மனோகர் உடலை மீட்டனர். பிராங்கிளின், ஆண்டோவை தேடும் பணி நடந்தது. இதில், பிராங்கிளினுக்கு நேற்று பிறந்த நாள்.
நீரில் மூழ்கிய ஐந்து பேரும் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தனர். சம்பவ இடத்தை தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
கலெக்டர் அளித்த பேட்டி:
இங்கு பார்ப்பதற்கு ஆற்றின் ஆழம் குறைவாக இருப்பதை போல தெரிவதால், வெளியூர் நபர்கள் குளிக்க முயற்சிக்கின்றனர். ஆற்றில் இறங்கிய ஐந்து வாலிபர்களிடமும், உள்ளூர்வாசிகள், 'இறங்க வேண்டாம்' என, எச்சரிக்கை செய்துள்ளனர்.
அதையும் மீறி இறங்கியுள்ளனர். ஆற்றில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை செய்து வருகிறோம்.
அதையும் மீறி குளிக்க செல்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியாக மேடு, பள்ளம் இருப்பதாக கூறுகின்றனர்.
ஆற்றின் அமைப்பு இப்படி தான் உள்ளது. இதை சீர்செய்ய வல்லுனர் குழு கொண்டு ஆய்வு செய்தால் தான் முடிவுகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2022 அக்., 3ம் தேதி துாத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டியை சேர்ந்த ஆறு பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.