/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பூச்சி தாக்குதல், கோடை மழையால் ஆயிரகணக்கான ஏக்கரில் எள் பாதிப்பு:
/
பூச்சி தாக்குதல், கோடை மழையால் ஆயிரகணக்கான ஏக்கரில் எள் பாதிப்பு:
பூச்சி தாக்குதல், கோடை மழையால் ஆயிரகணக்கான ஏக்கரில் எள் பாதிப்பு:
பூச்சி தாக்குதல், கோடை மழையால் ஆயிரகணக்கான ஏக்கரில் எள் பாதிப்பு:
ADDED : மே 21, 2024 09:36 AM

தஞ்சாவூர்,மே 21 - காவிரி டெல்டா மாவட்டங்களில், சித்திரைப் பட்டத்தில் எள், உளுந்து, கடலை போன்றவை பயிரிடுவது வழக்கம்.
இந்தாண்டு சித்திரைப் பட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் எள் பயிரிட்டப்பட்டது. தற்போது இப்பயிர்கள் வளர்ச்சி பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், திருவையாறு, திருவோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் எள் பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் இருந்த நிலையில், எள் கொண்டை பூச்சி என்கிற குருத்து இலைப்பிணைக்கும் புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், இளம்பருவத்தில் உள்ள பயிர்களில் இலைகளை புழுக்கள் ஒன்றாக உருட்டி உண்ணுவதால், துளிர் விடாமல் அழிந்துவிடுகின்றன. வளர்ச்சி பருவத்தின் பிற்பகுதியிலுள்ள பயிர்களிலும் தாக்குதல் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட தளிர்கள் வளர்வதும் நின்றுவிட்டன. இதனால் விவசாயிகள் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக வேதனையில் இருந்தனர்.
இருப்பினும், கடந்த ஒரு வாரமாக திடீரொன பெய்து வரும் மழையால் வளர்ச்சியடைந்த எள் செடி பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் பாதிப்பை சந்தித்துள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் எள் பயிர்களைத் தண்ணீர் விட்டு, பூச்சி மருந்து தெளித்து 50 நாள்களாகக் காப்பாற்றி வந்தோம். இதற்காக ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவு செய்தோம். அடுத்த 20 நாள்களில் பூ மலர்ந்து, பிஞ்சாகி, காயாகி அறுவடைக்கு தயாராக வேண்டும். இந்நிலையில், எள் செடிகளில் கொண்டை பூச்சி தாக்குதல் அதிகமாகிவிட்டது. இதனால், கூடுதலாக ரூ. 5 ஆயிரம் செலவு செய்து பூச்சி மருந்து தெளித்தும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. செடிகளின் நுனிப்பகுதியில் கருகி செடியை முற்றிலுமாக பாதித்துவிட்டது. இருப்பினும் எஞ்சிய பயிர்களை காப்பாற்றி விடலாம் என நினைத்த போது, மழையால் அதுவும் முற்றிலுமாக அழிந்து விட்டது. எனவே, ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செய்த நிலையில் பயிர்களைக் காப்பாற்ற முடியாததால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளோம் இவ்வாறு தெரிவித்தனர்.
விவசாயிகள் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் சின்னத்துரை கூறியதாவது: தொடர் மழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், எள், உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வேளாண் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டு சேதம் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு தொகையாக நெல், எள், உளுந்து பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

