/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மாணவ, மாணவியருடன் மனு தஞ்சை கலெக்டர் கடும் கோபம்
/
மாணவ, மாணவியருடன் மனு தஞ்சை கலெக்டர் கடும் கோபம்
ADDED : ஆக 05, 2024 11:54 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. கூட்டத்தின் போது, வடுகன்புதுப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு பஸ் வசதி கேட்டு, பள்ளி மாணவ, மாணவியரை சீருடையுடன் மனு அளிக்க அழைத்து வந்து இருந்தனர். இதைப் பார்த்த, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கோபமடைந்தார்.
'மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், படிப்பை கெடுக்கும் விதத்தில் மனு அளிக்க அழைத்து வருவது சரியானது அல்ல. முதலில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு வந்து மனு கொடுங்கள்' என கடுமையாக எச்சரித்தார்.
அதையடுத்து, கலெக்டரிடன் கோபமான வார்த்தைகளை கேட்டு, மனு கொடுக்க வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இச்சம்பவம் முடிந்த சில நிமிடங்களில், தஞ்சாவூர் மேலவெளி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் அய்யப்பன், தங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களுடன், பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து, சாலை வசதி கோரி மனு அளித்தார்.
இதனால், மேலும் கோபமடைந்த கலெக்டர், மனு அளிக்க வந்த அய்யப்பன் உள்ளிட்டோரிடம், ''மனு அளிக்க வரும் நீங்கள் எதற்காக படிக்கும் மாணவ, மாணவியரை அழைத்து வருகிறீர்கள். அவர்களின் படிப்பை வீணாக்குகிறீர்கள்.
''இது, தப்பான விஷயம். சட்டப்படி குற்றம். உங்கள் கோரிக்கை மனு மீது நான் நடவடிக்கை எடுக்கிறேன். ஆனால், மாணவ, மாணவியரை பள்ளி நேரத்தில் இங்கு அழைத்து வருவது சரியான முறை அல்ல,'' என, சரமாரியாக, 'டோஸ்' விட்டார்.
மேலும், ''இதே போல மீண்டும் செய்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரிக்கை விடுத்தார்.
கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.