/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
நிலம் கையகப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்
/
நிலம் கையகப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்
நிலம் கையகப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்
நிலம் கையகப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்
UPDATED : செப் 14, 2024 06:16 AM
ADDED : செப் 14, 2024 01:47 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று ஆய்வு செய்தார்.
மூப்பக்கோவில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வரைப்படத்தை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:
தஞ்சாவூர் - விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை, 4,730 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 164 கி.மீ.,க்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - சோழபுரம், சோழபுரம் - சேத்தியாதோப்பு சாலை பணிகள், 95 சதவீத நிறைவு பெற்றுள்ளன.
மொத்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் தான் முக்கிய சுணக்கமாக இருந்தன. தற்போது, 5 சதவீத பணிகள் தான் நிலுவையில் உள்ளன. நான்கு ஆண்டுகள் இந்த சாலை பணிகள் தாமதமாகி இருந்தாலும், தடைகளை தாண்டி, சாலை பணிகள் தரமாக இருந்தன. இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
மொத்த பணிகளையும் மத்திய அரசு ஊழல் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் செய்துள்ளது. முதல் கட்ட ஒப்பந்ததாரர் முறையற்ற நிலையில் இருந்ததால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் முடியும்.
தமிழகத்தில், 2014 முதல் 2024 வரை, 451 திட்டங்கள், 9,300 கி.மீ.,க்கு, 2 லட்சம் கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகமான முக்கியத்துவம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
நாடு முழுதும் 5 லட்சம் கோடி மதிப்பீட்டில், 10,000 கி.மீ., நீளத்தில், 27 புதிய பசுமை வழி சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் மூன்று பசுமை வழி சாலை, 187 கி.மீ., நீளத்தில் 10,100 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. தமிழக அரசு, நிலம் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சாலை போக்குவரத்தை பொறுத்துவரை தமிழக மக்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து தருகிறேன். மத்திய அரசு சாலை கட்டுமானத்தை அமெரிக்க தரத்திற்கு நிகராக கொண்டு வருவோம். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டில் தமிழகம் நம்பர் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நிதின் கட்கரி தன் மனைவியுடன், நாதன்கோவிலில் உள்ள ஜகன்நாத பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து, மகாமககுளத்தில் இறங்கி புனித நீரை தெளித்து வழிபட்டார்.