/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அழுக்கு துணியில் ரூ.5 லட்சம்: நகராட்சி கமிஷனர் காரில் சிக்கியது
/
அழுக்கு துணியில் ரூ.5 லட்சம்: நகராட்சி கமிஷனர் காரில் சிக்கியது
அழுக்கு துணியில் ரூ.5 லட்சம்: நகராட்சி கமிஷனர் காரில் சிக்கியது
அழுக்கு துணியில் ரூ.5 லட்சம்: நகராட்சி கமிஷனர் காரில் சிக்கியது
ADDED : ஆக 04, 2024 06:57 AM

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்துக்கும் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், லஞ்ச பணத்தை முக்கிய பொறுப்பில் உள்ள பலரும் பிரித்து எடுத்துக் கொள்வதாகவும் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியில் இருந்து நேற்று காலை 6:00 மணி வரை, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய குழுவினர், நகராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
துாக்கி வீசினார்
உதவி பொறியாளர் மனோகரன் மறைத்து வைத்திருந்த, கணக்கில் வராத, 80,000 ரூபாய், லஞ்சம் கொடுப்பதற்காக நின்ற கான்ட்ராக்டர் எடிசனிடம் இருந்து, 66,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் நகராட்சி கமிஷனர் குமரனின் கார் டிரைவரான வெங்கடேஷன், நகராட்சி அலுவலக சுற்றுச்சுவருக்கு வெளியே 8,000 ரூபாயை துாக்கி வீசியுள்ளார். அவர் வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
வீட்டிலும் சோதனை
அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன், அழுக்கு துணியை ஒரு பையில் வைத்து, அதில் தான் பெற்ற 5 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து, பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, காரில் இருந்த பையை சோதனை செய்த போது, அழுக்கு துணியில் மறைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியது. கமிஷனர், உதவி பொறியாளர், டிரைவர் உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கணக்கில் வராத 6.54 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கான்ட்ராக்டர் எடிசன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.