/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பாதாள சாக்கடை பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி
/
பாதாள சாக்கடை பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி
ADDED : ஆக 06, 2024 12:24 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டு விளார் லாயம் பகுதி, ஜெகநாதன் நகரில் பாதாள சாக்கடையில் இருந்து, அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையில் ஓடியது. இதையடுத்து கவுன்சிலர் கண்ணுக்கினியாள் தலைமையில், அப்பகுதியினர் சில நாட்களுக்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, அப்பகுதியில் பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணி, 10 நாட்களாக நடக்கிறது.
இதில், பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிப்பதற்காக, 15 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று பணியில் எட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலை 6:30 மணிக்கு, தஞ்சாவூரை சேர்ந்த ஜெயநாராயணமூர்த்தி, 27, புதுக்கோட்டையை சேர்ந்த தேவேந்திரன், 32, ஆகிய இருவரும் குழியில் இறங்கி குழாயை சரி செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து இருவர் மீதும் விழுந்தது.
தீயணைப்பு வீரர்கள் வந்து, தொழிலாளர்களுடன் இணைந்து இடுப்பளவு மண்ணில் சிக்கியிருந்த தேவேந்திரனை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மண்ணுக்குள் சிக்கி இருந்த ஜெயநாராயணமூர்த்தியை மீட்க, மூன்று பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் அவர், இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.