நா.த.க., வேட்பாளர் மீது தாக்குதல் மறியலில் ஈடுபட்ட 225 பேர் கைது
நா.த.க., வேட்பாளர் மீது தாக்குதல் மறியலில் ஈடுபட்ட 225 பேர் கைது
ADDED : ஏப் 26, 2026 01:35 AM

தஞ்சாவூர்: நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க.,வினரை, கைது செய்யக்கோரி, மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், நா.த.க., வேட்பாளர் அனீஸ் பாத்திமா, 25; ஏப்., 23ல் தேர்தல் நாளன்று உக்கடையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவை பார்வையிட சென்றபோது, தி.மு.க., ஒன்றிய செயலர் சுரேஷ் உள்ளிட்ட தி.மு.க.,வினர், எட்டு மாத கர்ப்பிணியான அவரை தாக்கினர்.
இதில் காயமடைந்த பாத்திமா, தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனீஸ் பாத்திமா புகாரின்படி, தி.மு.க.,வினர் சிலர் மீது, அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை கைது செய்யக்கோரி, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனை, நா.த.க.,வினர் நேற்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய, கால அவகாசம் கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், மறியலில் ஈடுபட்ட, 225 பேரை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர்.
