/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மற்றவர்களுக்காக பல உரிமைகளை பெற்று தந்தது பிராமணர் சமூகம்: தி.மு.க., - எம்.எல்.ஏ., பாராட்டு
/
மற்றவர்களுக்காக பல உரிமைகளை பெற்று தந்தது பிராமணர் சமூகம்: தி.மு.க., - எம்.எல்.ஏ., பாராட்டு
மற்றவர்களுக்காக பல உரிமைகளை பெற்று தந்தது பிராமணர் சமூகம்: தி.மு.க., - எம்.எல்.ஏ., பாராட்டு
மற்றவர்களுக்காக பல உரிமைகளை பெற்று தந்தது பிராமணர் சமூகம்: தி.மு.க., - எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : டிச 23, 2024 05:24 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், 45வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் சங்கரராமநாதன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, பிராமண சமூகத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் பேசுகையில், ''நாம் ஓட்டு போட வேண்டும். நம் ஓட்டால் மாற்றம் வரும். நம் பாரம்பரியத்தை நாம் மதிக்க வேண்டும். நம் ஆச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்றினால், நம் சமூகம் உயர்வு பெறும்,'' என்றார்.
பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''நமக்கான வாய்ப்பு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நம் சமூகத்திற்கு கிடைத்துள்ளது. ஜாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு என இருந்ததை, பொருளாதார அடிப்படையில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு என, உருவாக்கினார். இது, மத்திய அரசின் தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக உள்ளது.
''இதற்கு வருமானம், 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது தான் விதி. நம் சமூக மக்கள், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைவருக்கும் தெளிவுப்படுத்தவும், குழந்தைகளுக்கு எப்படி பயன் உள்ளதாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும், மாவட்டந்தோறும் ஒரு உதவி மையத்தை அமைக்க வேண்டும்.
''இந்த இட ஒதுக்கீட்டை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் இது நடைமுறைக்கு வரவில்லை. நமக்கு எதிராக பல்வேறு எதிர்மறை கருத்துக்களை கேட்டுக்கொண்டு, நமக்கான வாய்ப்புகள் வரும் போது கூட, நாம் அதை எதிர்மறையாக நினைக்கிறோம். இதை மாற்ற வேண்டும்,'' என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பேசுகையில், ''சமூக மேடை எனக்கு முதல் மேடை. நான் எந்த சமூகத்தையும் சார்ந்தவன் இல்லை என்பதால், மூன்றாவது முறையாக கும்பகோணம் மக்கள் என்னை தேர்வு செய்துள்ளனர். ஜனநாயக முறைப்படி களத்தில் இருந்தாலும், நான் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவன். இந்த பிராமண சமூகம் மற்றவர்களுக்காக பல உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளது.
''தி.மு.க., ஆட்சியில் கோவில்களில் கும்பாபிஷேகம், பூஜைகள் நடக்காது என சொன்னார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. தி.மு.க., பிராமணர்களுக்கு எதிரானது அல்ல,'' என்றார்.
முன்னதாக, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் விளக்கினார்.

