
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கொல்லங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சுகந்தி.
இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதால், கனவர் பெயரில் உள்ள சொத்துகளை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு, ஒரு மாதத்துக்கு முன், வி.ஏ.ஓ., வள்ளி, 54, என்பவரிடம் மனு அளித்தார். இந்நிலையில், வி.ஏ.ஓ., வள்ளி 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகந்தி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். 2,000 ரூபாயை சுகந்தி, வி.ஏ.ஓ., வள்ளியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வள்ளியை கையும் களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தெற்குசத்திரத்தைச் சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து, 64. இவரது நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு பெற சிவகிரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரை அணுகினார்.
முத்துக்குமாருடன், போர்மேன் மருதுபாண்டி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். மாரிமுத்து, தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நேற்று மதியம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற முத்துக்குமார், மருதுபாண்டி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து கணக்கில் வராத, 3.36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.