ADDED : மே 10, 2026 02:50 AM

தஞ்சாவூர்: நாட்டு வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில், கட்டடம் முழுதும் இடிந்து தரைமட்டமானது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவலஞ்சுழியை சேர்ந்தவர் ஏசுதாஸ், 46. இவர், மணப்படையூரில், உரிய அனுமதி பெற்று, நாட்டு வெடி தயாரித்து, கிடங்கில் சேமித்து விற்பனை செய்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கிடங்கில் இருந்த, 3 கிலோ எடையிலான நாட்டு வெடிகள், வெடித்து சிதறின.
இதில், அந்த கட்டடம் முழுதும் இடிந்து தரைமட்டமானது. ஓடுகள் மற்றும் கற்கள், 2 கி.மீ., துாரத்துக்கு சிதறின. ஐந்து மரங்கள் கருகின.
சுவாமிமலை போலீசார், கைரேகை பிரிவு இணை இயக்குநர் குமரவேல் தலைமையிலான அதிகாரிகள், தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணையில், கிடங்கில் விற்பனைக்காக வைக்கப்பட்ட வெடிகள், வெப்பம் காரணமாக வெடித்திருக்கலாம் என, தெரிந்தது. நள்ளிரவில் நடந்த விபத்தால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
