/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்
/
ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்
ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்
ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்
ADDED : நவ 23, 2024 02:19 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் முகாமிட்டனர்.
முடச்சிக்காடு என்ற பகுதியில் நின்ற லாரியில் இருந்து காரில், கஞ்சா பொட்டலங்களை மூன்று பேர் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார், கார் மற்றும் லாரியை சோதனை செய்து, 330 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, தென்காசி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்த லாரி டிரைவர் பெரமராஜ், 34, பேராவூரணி காரங்குடாவை சேர்ந்த அண்ணாதுரை, 44, அம்மணிசத்திரத்தை சேர்ந்த முத்தையா, 60, ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, லாரியில் ரகசிய அறை அமைத்து, அதில் கஞ்சாவை பதுக்கி எடுத்து வந்தது தெரிந்தது.
மேலும், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அந்தந்த மாநிலங்களின் பதிவெண் கொண்ட, போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி, போலீசார் கண்ணில் மண்ணை துாவியதும் தெரிந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, காரை பறிமுதல் செய்த போலீசார், இலங்கைக்கு அந்த கஞ்சாவை கடத்துவதற்காக காத்திருந்த மூன்று படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள கருப்பையாவை போலீசார் தேடி வருகின்றனர்.