ADDED : ஏப் 27, 2025 03:12 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருள்சூசை, 50; அருள்மேக்ஸ் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர். தொழிலதிபரான இவர், துபாய் மற்றும் நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். தாய் இறந்து, தந்தை குடிக்கு அடிமையான நிலையில், அத்தை பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுமியிடம், ஆசைவார்த்தைகளை கூறி பழகிய அருள்சூசை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளியில் விபரம் அறிந்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வாயிலாக புகார் கிடைத்தும், பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் அப்போது வழக்கு பதிவு செய்யவில்லை. அருள்சூசை, சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த புகார் தஞ்சாவூர் டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., கவனத்திற்கு சென்றதையடுத்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார், நேற்று முன்தினம் விசாரித்தனர். அருள்சூசை மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். ஏற்கனவே, அருள்சூசை பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

