/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மன்னர் ராஜராஜசோழனின் சதய விழா ஆண்டில் குழப்பம்
/
மன்னர் ராஜராஜசோழனின் சதய விழா ஆண்டில் குழப்பம்
ADDED : அக் 17, 2025 02:14 AM
தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழா கணக்கீட்டில் உள்ள தவறால், சதய விழா தவறாக ஆண்டு கணக்கீடு செய்து கொண்டாடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தஞ்சாவூர், பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளில், சதய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை அரசு விழாவாக தமிழக அரசால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்தாண்டு, 1040ம் ஆண்டு சதய விழா அக்., 31ம் மற்றும் நவ., 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், சதயவிழாவுக்கான ஆண்டு தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மாற்றி கொண்டாட வேண்டும் என ஜாதி அமைப்பு ஒன்று, சமீபத்தில் உயர் அதிகாரிகள் முதல் கலெக்டர் வரை மனு அளித்துள்ளனர். மேலும், வரும் அக்., 22ம் தேதி, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆர்.டி.ஐ., தகவல் மூலம் கேட்டறிந்த ஸ்ரீதரன் கூறியதாவது:
சென்னை பல்கலை. பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல்துறையிடமிருந்து ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலில், மாமன்னன் ராஜராஜசோழன் 947ம் ஆண்டு பிறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் பதிப்பில் வெளியான பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் என்னும் நுாலில், ராஜராஜசோழன் 985ம் ஆண்டில் அரியனை ஏறியது தொடர்பான தகவல் உள்ளன.
தற்போது, ராஜராஜசோழன் முடிசூட்டு ஆண்டான 985ன் அடிப்படையில், கணக்கீடு செய்து, 1040ம் ஆண்டு சதய விழா என கொண்டாடப்பட உள்ளன. ஆனால், ஒருவரின் பிறந்த ஆண்டை அடிப்படையாக வைத்து தான் சதய விழா கணக்கீடு செய்ய வேண்டும்.
அப்படி பார்த்தால், 947ம் ஆண்டில் என்றால், இந்தாண்டு 1078ம் ஆண்டு என வருகிறது. இதன் அடிப்படையில், 38 ஆண்டுகள் வேறுபாடு உள்ளது.
முடிசூட்டு ஆண்டை அடிப்படையாகக் கொண்டு விழா நடத்துவது ஏற்புடையது அல்ல. ராஜராஜ சோழரின் உண்மையான வயதை மறைக்கிறது. அவரது ஆட்சி காலத்தின் நீளத்தை தவறாக காட்டுகிறது. முடிசூட்டுக்கு முன்பான, 38 ஆண்டுகால வாழ்க்கையை புறக்கணிக்கிறது.
எனவே, அரசு சதய விழா கணக்கீட்டை திருத்தம் செய்து, 1078ம் ஆண்டு சதய விழா என அறிவிக்க வேண்டும்.சரியான வரலாற்று தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள், பேராசிரியர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், 'ராஜராஜசோழனின் சதய விழாவில் முரண்பாடுகள் இன்றவும் உள்ளன. சதய நட்சத்திர நாளில் விழா கொண்டாடப்பட்டதாக, கல்வெட்டு அடிப்படையில், விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அவர் பிறந்த ஆண்டும் 947ம் ஆண்டு என்பதற்கான முறையான கல்வெட்டு கிடைக்க பெறவில்லை. கிடைத்தால் முறையாக சதய விழாவை மாற்றி அரசு அறிவிக்க வேண்டும். மேலும், சிலர் ராஜராஜசோழன் சித்திரையில் பிறந்தவர் என கூறி வருகின்றனர். ராஜராஜசோழனின் சதய விழா தொடர்பாக, தமிழக அரசு ஒரு குழுவை நியமித்து உண்மையறிந்து, எதிர்காலத்தில் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.