/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
விநாயகர் சிலை அதிரடி அகற்றம் இந்து அமைப்பினர் இருவர் கைது கூத்தாநல்லூரில் போலீஸ் குவிப்பு
/
விநாயகர் சிலை அதிரடி அகற்றம் இந்து அமைப்பினர் இருவர் கைது கூத்தாநல்லூரில் போலீஸ் குவிப்பு
விநாயகர் சிலை அதிரடி அகற்றம் இந்து அமைப்பினர் இருவர் கைது கூத்தாநல்லூரில் போலீஸ் குவிப்பு
விநாயகர் சிலை அதிரடி அகற்றம் இந்து அமைப்பினர் இருவர் கைது கூத்தாநல்லூரில் போலீஸ் குவிப்பு
ADDED : செப் 19, 2011 12:36 AM
மன்னார்குடி: தஞ்சை மாவட்டம், கூத்தாநல்லூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த
விநாயகர் சிலையை, போலீஸாரே அகற்றி ஆற்றில் கரைத்தனர். மேலும், இந்து
அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்ததால், அங்கு பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், மன்னார்குடி தாலுகா கூத்தாநல்லூர் கம்பர்
தெருவில், கடந்த 22 ஆண்டாக விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை
பிரதிஷ்டை செய்யப்படும். பின், விநாயகர் சதுர்த்தியன்று கூத்தாநல்லூரின்
முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோரையாற்றில் கரைக்கப்படும்.
இந்தாண்டு விநாயகர் ஊர்வலம் கிளம்பிய போது, பெரியக்கடைவீதியில் பெரிய
பள்ளிவாசல் இருப்பதால், அவ்வழியாக செல்லக்கூடாது என, போலீஸார் தடை
விதித்தனர். ஏ.ஆர்., சாலை, சின்ன கூத்தாநல்லூர், மரக்கடை, பாய்க்காரத்தெரு,
மேல்கொண்டாளி வழியாக சென்று கோரையாற்றில் கரைக்க வேண்டும் என, போலீஸார்
அறிவுறுத்தினர். கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது, எவ்வித பிரச்னையும் எழாத
நிலையில், போலீஸார் வீண் பீதியை கிளப்பி, மாற்றுப்பாதையில் செல்லுமாறு
அறிவுறுத்தியதை இந்து அமைப்புகள் ஏற்கவில்லை. அதையடுத்து, போலீஸார்
ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். அதனால்,
விநாயகர் சிலை கரைக்கப்படாமல், கடந்த 12 நாட்களாக அங்கேயே வைக்கப்பட்டு,
பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில், கூத்தாநல்லூர் நகர இந்து சமுதாய
பாதுகாப்புப் பேரவை ஆலோசனைக்கூட்டம், லெட்சுமாங்குடி கம்பர் தெருவில்
நேற்று நடந்தது. பேரவைத்தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,
கடந்தாண்டு சென்ற வழியிலேயே விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி
கொடுக்க வேண்டும். ஒருவாரத்தில் அனுமதி கொடுக்க தவறினால், போராட்டம் நடத்த
முடிவு செய்யப்பட்டது.
இத்தகவலை, கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், மாவட்ட
கலெக்டருக்கும், எஸ்.பி.,க்கும் தெரிவித்தனர். இதையடுத்து, விநாயகர் சிலையை
போலீஸாரே எடுத்துச் சென்று ஆற்றில் போடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், மன்னார்குடி ஆர்.டி.ஓ.,
சவுந்திரராஜன், கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் போலீஸாருடன்
சென்று, கம்பர் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை எடுத்து,
வெண்ணாற்றில் போட்டனர். தொடர்ந்து, இந்து பாதுகாப்பு பேரவை தலைவர் சிவராமன்
மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும்,
கூத்தாநல்லூர் லட்சுமாங்குடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.