/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
காய்ந்த பயிர்கள் கால்நடைக்கு உணவாகின; எஞ்சியதை காப்பாற்ற தண்ணீர் கேட்டு மனு
/
காய்ந்த பயிர்கள் கால்நடைக்கு உணவாகின; எஞ்சியதை காப்பாற்ற தண்ணீர் கேட்டு மனு
காய்ந்த பயிர்கள் கால்நடைக்கு உணவாகின; எஞ்சியதை காப்பாற்ற தண்ணீர் கேட்டு மனு
காய்ந்த பயிர்கள் கால்நடைக்கு உணவாகின; எஞ்சியதை காப்பாற்ற தண்ணீர் கேட்டு மனு
ADDED : பிப் 12, 2024 11:20 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சாகுபடி செய்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, வெண்ணாறு, கல்லணை கால்வாய், பிள்ளை வாய்க்கால், ஆனந்த காவேரி வாய்க்கால் பாசன பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு முறை தண்ணீர் திறந்தால், பயிர்களை காப்பாற்றலாம் என, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் கண்ணன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கலெக்டர் தீபக் ஜேக்கபிடம் நேற்றும் மனு அளித்தனர்.
மணியரசன் கூறியதாவது:
மேட்டூரில் இருந்து திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை வரவேற்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலுார், பட்டுக்கோட்டை உள்ளிட்ட யூனியனில் காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் இல்லை.
இந்த யூனியனுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். பயிர்களை காப்பாற்ற முடியாத வேதனையில், விவசாயிகளின் மரணம் கூட நிகழலாம் எனக்கூறி மனு அளித்துள்ளோம். கலெக்டர், 'பார்ப்போம்' என கூறினாரே தவிர, உறுதி அளிக்கவில்லை.
தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். மேட்டூர் அணையை திறப்பதற்கு தாமதமானால் கூட, கல்லணையில் தேங்கியுள்ள நீரையாவது உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில், ஆற்று பாசனத்தை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, நான்கு மாதங்களாக காவிரி நீர் இல்லாததால், பயிர்கள் காய்ந்துவிட்டன.
இந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது என்பதால், விவசாயிகள் கால்நடைகளை மேய விட்டுள்ளனர்.