/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்
/
பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்
ADDED : ஜன 15, 2025 08:48 AM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், தமிழக சுற்றுலா துறை சார்பில், சூரக்கோட்டை கிராமத்தில் பொங்கல் மரபு நடைபயணம் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சூரக்கோட்டை அய்யனார் கோவிலில் மேளதாளத்துடன், வயல்வழி நடைபயணமாக, கிராமங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு வீட்டு வாசல்களில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பது, சூரிய பகவானுக்கு அதை எப்படி படைக்கின்றனர் என்பதை பார்த்து ரசித்தனர்.
மேலும், வீட்டு வாசல்களில் அழகாக வரையப்பட்ட கோலங்கள், பெண்கள் காய்கறிகள் நறுக்குவது, வெல்லம் உடைப்பது, தேங்காய் கீருவது போன்ற மரபு செயல்பாடுகளை ஆர்வமாக கவனித்தனர்.
பொங்கல் வைத்து வெளிநாட்டு சுற்றுபயணியருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும், பொங்கல் மற்றும் கரும்புகளை வழங்கினர்.
தொடர்ந்து கிராம மக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒருங்கிணைந்து கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய பாரம்பரிய நடனங்களை கண்டு ரசித்ததோடு, அவர்களுடன் சேர்ந்து நடனமாடியும் மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்து இருந்தார்.