/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் 170 தற்காலிக கடை அகற்றம் :கட்சியினரிடம் லஞ்சம் கொடுத்த வியாபாரிகள் மறியல்
/
தஞ்சையில் 170 தற்காலிக கடை அகற்றம் :கட்சியினரிடம் லஞ்சம் கொடுத்த வியாபாரிகள் மறியல்
தஞ்சையில் 170 தற்காலிக கடை அகற்றம் :கட்சியினரிடம் லஞ்சம் கொடுத்த வியாபாரிகள் மறியல்
தஞ்சையில் 170 தற்காலிக கடை அகற்றம் :கட்சியினரிடம் லஞ்சம் கொடுத்த வியாபாரிகள் மறியல்
ADDED : அக் 25, 2024 02:13 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, காந்திஜி சாலை, கீழவாசல் சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தற்காலிகக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.
இதற்காக, வியாபாரிகளிடம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், கடைகளின் அளவுக்கு ஏற்ப, 30,000 முதல், 90,000 ரூபாய் வரை பணம் பெற்று, கடை வைக்க வியாபாரிகளுக்கு அனுமதி அளித்தனர்.
அதன்படி, நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக, தற்காலிகக் கடைகள் அமைத்துக் கொண்ட வியாபாரிகள், விற்பனையை துவங்கினர்.
இந்நிலையில், விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 170 தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என கோரப்பட்டது.
விசாரித்த நீதிபதிகள், உடனே கடைகளை அகற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், மூன்று இடங்களில் சாலைகளின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகளை அகற்றினர்.
இதைக் கண்டித்து, காந்திஜி சாலையில் நேற்று காலை வியாபாரிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகளிடம் ஆளும் தரப்பினர் பெற்ற தொகையை திருப்பித் தர வேண்டும் அல்லது வியாபாரம் செய்ய கடைகளை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போலீசார், வியாபாரிகள் சிலரை தாக்கி, குண்டுக்கட்டாக, பஸ்சில் ஏற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர்.
அதே சமயம் அண்ணா சிலை அருகில் கீழவாசல் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடை வியாபாரிகள், ஏ.ஐ.டி.யூ.சி., தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த டி.எஸ்.பி., சோமசுந்தரம், வியாபாரிகளை விரட்டினார். 'பணம் கொடுத்தவரிடம் போய் கேளுங்கள்; சாலையை மறிக்கக் கூடாது' என உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறியதாவது:
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கேட்ட தொகையை வழங்கி கடையை பிடித்தோம். இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவு எனக் கூறி, கடைகளை அகற்றி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து எதுவும் கண்டு கொள்ளவில்லை.
எனவே, நாங்கள் வழங்கிய தொகையை திரும்ப வழங்க வேண்டும் அல்லது கடைகள் அமைப்பதற்கான இடங்களை ஒதுக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.