கும்பகோணம் மாவட்டம் கோரிக்கை தீர்மானம் போட்டும் முதல்வர் மவுனம்
கும்பகோணம் மாவட்டம் கோரிக்கை தீர்மானம் போட்டும் முதல்வர் மவுனம்
ADDED : ஜன 30, 2026 02:22 AM
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக, இஸ்லாமிய மாநாட்டில், முதல்வர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, 25 ஆண்டுகளாக, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்' என வாக்குறுதி அளித்தார்.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டாகியும், இதுவரை கும்பகோணம் தனி மாவட்டம் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து, கும்பகோணம் தனி மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழுவினர், முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கும்பகோணத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், கும்பகோணம் மாவட்டம் தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என, பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் பலரும் அதிருப்தியடைந்தனர்.
மேலும், மாநாட்டில், முதல்வர் மேடையில் இருக்கும் போதே, கும்பகோணத்தை தனி மாவட்டமாக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தனர். அப்போதும், முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருந்தார்.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு இவ்விவகாரம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆளுங்கட்சி நிர்வாகிகள் புலம்பி தவிக்கின்றனர்.
