/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மறைமலை அடிகள் பேத்திக்கு குடிசை மாற்று வாரிய வீடு
/
மறைமலை அடிகள் பேத்திக்கு குடிசை மாற்று வாரிய வீடு
ADDED : நவ 28, 2024 02:50 AM

தஞ்சாவூர்:தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான மறைமலை அடிகளின் மகனான பச்சையப்பனின் மகள் லலிதா, தஞ்சை கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் செந்தில்குமார், கூலித்தொழிலாளி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
வாடகை வீட்டில் வசித்து வரும் லலிதா, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், 'குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்; மகளிர் உரிமைத்தொகை வேண்டும்' என கேட்டு மனு அளித்து இருந்தார். இது தொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம், லலிதா குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி தொகையை அறிவித்தார்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில், கட்டப்பட்டுள்ள வீட்டிற்கான சாவியை லலிதாவிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் வழங்கினார்.
லலிதா கூறியதாவது:
எனக்கு வீடு வழங்க, 73,000 ரூபாய் பணம் செலுத்த கூறப்பட்டது. தற்போது, அந்த தொகையை அரசே செலுத்தி விட்டு, எனக்கு வீடு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
மேலும், இரண்டு நாளில் வீடு வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.