/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தாய், மகள்கள் தற்கொலைக்கு ஆன்லைன் மோசடி காரணம்
/
தாய், மகள்கள் தற்கொலைக்கு ஆன்லைன் மோசடி காரணம்
ADDED : பிப் 12, 2024 11:30 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஆர்த்தி, 40, மகள்கள் ஆரூத்ரா, 11, சுபத்ரா, 7, ஆகியோருடன் நேற்று முன்தினம் கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், ஆர்த்திக்கு சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக வாட்ஸாப் குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர், தன் நகைகளை விற்று, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணையாக, 30 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். பின், மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழலில், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்தார்.
தஞ்சாவூரில் புகார் அளித்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால், தன் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஜன., 24ல் புகார் அளித்துள்ளார். கணவருக்கும், உறவினருக்கும் தெரிந்தால் அவமானமாகி விடும் எனவும், தான் இறந்து விட்டால் பெண் பிள்ளைகள் தவிக்கும் என்றும் கருதி, ஆர்த்தி தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே போல, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரை சேர்ந்த ரேவதி, 50. கடன் தொல்லை காரணமாக மனவளர்ச்சி குன்றிய தன் மகளுடன், நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.