/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சோழர் கால முருகன் சிலை, கோபுர கலசம் கண்டெடுப்பு
/
சோழர் கால முருகன் சிலை, கோபுர கலசம் கண்டெடுப்பு
ADDED : டிச 05, 2024 11:23 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகத்தின் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் கூறியதாவது:
கோரையாற்றின் கிளை ஆறான அரிச்சந்திரா நதியின் வடகரையில், விக்கிரபாண்டியம் கிராமம் உள்ளது. இவ்வூரை சோழ, பாண்டிய, நாயக்கர், மராத்திய மன்னர்கள் ஆண்டுள்ளனர். பாண்டிய மன்னர்களில் ஒருவரான வீரபாண்டியனின் மகன் விக்கிரமபாண்டியனின் பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இவ்வூரில், முற்றிலும் சிதைந்து போன நிலையில் இருந்த சிவாலயம் உள்ள இடத்தில், புதிய கோவில் அமைப்பதற்காக குழி தோண்டிய போது, சோழர்கள் கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அங்கு காணப்பட்ட சிற்பங்கள், சிலைகளை ஆய்வு செய்தோம். அதில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்தை சேர்ந்த, முருகன் கல் சிற்பம் ஒன்றும், கோவில் மாடத்தில் இருக்கும் கலசங்களையும் கண்டுபிடித்தோம். மேலும், கோவிலுக்கு எதிரே வயல்வெளியில், சோழர் காலத்தை சேர்ந்த கருப்பு - சிவப்பு பானை ஓடுகளின் உடைந்த துண்டுகளையும் காண முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.