கொள்முதலுக்கான அரசாணை தாமதம்: நெல் மணிகள் தேக்கம்
கொள்முதலுக்கான அரசாணை தாமதம்: நெல் மணிகள் தேக்கம்
ADDED : செப் 06, 2026 11:13 PM

தஞ்சாவூர்: நடப்பு பருவத்தில், நெல் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு இன்னும் வெளியிடாததால், கொள்முதல் செய்யப்படாமல் நெல் தேக்கமடைந்துள்ளது.
இந்திய உணவு கழகம், ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள் முதல் பருவ காலத்தை அக்., 1 முதல் செப்., 30 வரை நிர்ணயித்துள்ளது. ஆனால், 2022ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-க்கு முன்பாக மே 24ல் திறக்கப்பட்டது.
அனுமதி அப்போது, குறுவை சாகுபடியும் முன்கூட்டியே தொடங்கி, அறுவடைக்கு வந்ததால், விவசாயிகளின் கோரிக்கைபடி, தமிழக அரசு கொள்முதல் பருவத்தை அக்., 1க்கு பதிலாக, செப்., 1ம் தேதியே முன்கூட்டியே அறிவித்து, கொள்முதல் பணியை தொடங்க, இந்திய உணவு கழகம், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, மத்திய அரசும் அதற்கான அனுமதியை வழங்கியது.
அதன்பின், 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்கான நெல் கொள்முதலை செப்., 1ம் தேதியாக மாற்றி, தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டு, அந்த ஆண்டுக்கான புதிய விலையில் கொள்முதல் செய்து வருகிறது.
இந்தாண்டு பம்புசெட் வாயிலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் அறுவடை தொடங்கி, நெல் மணிகளை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ளனர்.
செப்., 6 தேதி வரை, புதிய கொள்முதல் பருவம், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்ய, அதற்கான அரசாணை வராத நிலையில், கொள்முதல் பணிகள் முடங்கியுள்ளன.
ஒருசில இடங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் பணியை செய்தாலும், அதற்கான ரசீது மற்றும் பண பட்டுவாடா வழங்கப்படவில்லை.
குழப்பம் இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
குறுவை கொள்முதலை செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க, இந்திய உணவு கழகம், மத்திய அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று, அதற்கான அரசாணையை கடந்த ஆட்சியாளர்கள் வெளியிட்டனர்.
கடந்தாண்டு கொள்முதல் பருவத்தில், பொது ரகம் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாயும், இந்தாண்டு, 2,600 ரூபாயும், சன்ன ரகத்துக்கு கடந்தாண்டு, 2,545 ரூபாயும் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு, 2,750 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தாண்டு புதிய விலையில் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை வெளியிடவில்லை. மத்திய அரசிடம் கொள்முதல் பணியை தொடங்க, அரசு அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. பணியாளர்களும், எந்த விலையில் கொள்முதல் செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
