/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சம்பா பயிர்கள் மூழ்கின; விவசாயிகள் வேதனை
/
சம்பா பயிர்கள் மூழ்கின; விவசாயிகள் வேதனை
ADDED : அக் 16, 2024 02:06 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குலமங்களம், சமையன்குடிக்காடு பகுதி வழியாக செல்லும் கண்ணனாற்றில் வெங்காயத்தாமரை, செடி கொடிகள் படர்ந்து மழைநீரும், பாசன நீரும் வடிய தடையாக உள்ளது.
மழைநீர் வடியாமல் அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், 20 தினங்களுக்குள் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா இளம் நெற்பயிர்கள் நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மழைநீரில் மூழ்கியதால் அழுகின.
கட்டமைப்பு சேதம்
அதே நேரத்தில், குலமங்களத்தில் கண்ணனாற்றின் கரை சேதமடைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், சேதமடைந்த பகுதி மேலும் விரிவடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என, விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று குலமங்களத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கண்ணனாற்றில் மழைநீர் செல்ல தடையாக இருக்கும் செடி, கொடிகளை அகற்றத் துவங்கினர். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாகவும், ஆழமாகவும் இருப்பதால், அவர்களால் முழுமையாக அகற்ற முடியவில்லை.
கண்ணனாறு கரை சேதம், மழைநீரால் சம்பா நெற்பயிர் பாதிக்கப்பட்டது தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:
நீர்ப்பாசனத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், ஒட்டுமொத்த நிதியும் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது.
இதனால், ஒட்டுமொத்த பாசன கட்டமைப்புகளும் சீரழிந்து கிடக்கின்றன.
சிறு மழை பெய்தால் கூட பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காவிரி டெல்டா விளைநிலங்கள் நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டு குறுவையை இழந்த விவசாயிகள், ஒருபோக சம்பா சாகுபடி காலத்தில் சாகுபடி பணி துவங்கினாலும், மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை.
சிறப்பு நிதி தேவை
மழை பெய்கிற நேரத்தில் தான் காவிரி நீர் விளைநிலங்களுக்கு செல்கிறது. தொடர்ந்து விவசாயிகள் அழிவை சந்தித்து வருகின்றனர். காவிரி டெல்டாவில் நீர்ப்பாசன வடிகால்களை, துார்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.
அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் கொள்ளளவை அதிகப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
பாசன வடிகால் கட்டமைப்புகள், கதவணைகள் சீர் செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேட்டூர் அணை நிரம்பினாலும் அதை கொண்டு, பாசனம் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் பொருளாதாரம் சீரழிவதோடு, உணவு உற்பத்தி அடியோடு அழியும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.