/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஏப் 21, 2024 12:38 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் கோவிலில், ஏப்., 6ல் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை, 5:30 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேரடிக்கு புறப்பட்டு வந்தன.
பின், தியாகராஜர் - கமலாம்பாள் தேரில் எழுந்தருள, காலை, 7:00 மணிக்கு கலெக்டர் தீபத் ஜேக்கப், எஸ்.பி., ஆஷிஷ் ராவத், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சூரியனார்கோவில் ஆதீனம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின், ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடிக்க, தேர், 14 நிலைகளில் நிறுத்தப்பட்டு, மீண்டும் மதியம் 12:45 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்டம் துவங்கிய போதே அலங்கார பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியது. பின், கொங்கனேஸ்வரர் கோவில் அருகே வலது பக்க மின் கம்பத்திலும், அடுத்த 50 அடி தொலைவில் மற்றொரு மின் கம்பத்திலும் தேரின் அலங்கார தொம்பைகள் சிக்கின.
கோவில் பணியாளர்கள் அந்த தொம்பைகள், அலங்காரம் செய்யப்பட்ட கட்டைகளை அகற்றி தேர் அளவை குறைத்ததால், தேரோட்டம் தாமதமானது. தேரின் அழகும் குறைந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். மின்கம்பத்தில் சிக்கிய தொம்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் வெங்கடேஷன், 34; தலையில் இரும்பு கம்பி தாக்கி காயமடைந்து, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமாக தேர் அலங்காரம், 21 அடி அகலம், 60 அடி உயரம் இருக்கும். தேரோட்ட சாலையை ஆய்வு செய்யாமல், இம்முறை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் அலங்கார வடிவத்தை மாற்றி, தேரின் இருபுறம், 1.5 அடி அகலத்தை கூடுதலாக மாற்றியதே பிரச்னைக்கு காரணம்.

