ADDED : செப் 20, 2011 11:43 PM
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் பஹாத்முகம்மது தலைமை வகித்தார். முருகானந்தம், முகம்மது ராவுத்தர், கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கந்தசாமி துவக்க உரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் ராஜசேகர், மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை செய்தனர்.
அடையாள அட்டை பெறுகின்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கிடும் உதவித்தொகையை மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலம் வழங்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு உரிய சட்டபூர்வ உரிமைகளை தர அதிகாரிகளுக்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான பல் நோக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், மாத பராமரிப்பு உதவித்தொகையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.உதவித்தொகையை வங்கியில் எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் மூலம் வழங்கிட வேண்டும். மாற்றுதிறனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு ஆணையிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.