UPDATED : ஏப் 21, 2024 05:27 PM
ADDED : ஏப் 20, 2024 11:42 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டத்தில், மின்கம்பியின் சிக்கிய தொம்பைகளை( தேரில் துணியால் செய்யப்பட்ட அலங்காரம்) அகற்றும் போது இரும்பு கம்பி தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் கோவில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(20ம் தேதி) காலை 5:30 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேருக்கு புறப்பட்டு, காலை 6:15 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளினர்
பிறகு, தியாகராஜர் - கமலாம்பாள் தேரில் எழுந்தருள, காலை 7:00 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபத் ஜேக்கப், எஸ்.பி., ஆஷிஷ் ராவத், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சூரியனார்கோவில் ஆதீனம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கினர்.
தேரோட்டம் துவங்கிய போதே அலங்காரப் பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியதால், புறப்படுவதில் 15 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, வலது புற மின் கம்பத்தில் தேர் அலங்கார தொம்பைகள் சிக்கியது. இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட தேர் புறப்பட்டது. இருப்பினும், அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்கார தொம்பைகள் சிக்கியதால், கோவில் பணியாளர்கள் அந்த தொம்பைகள், அலங்காரம் செய்யப்பட்ட கட்டைகளை அகற்றினர். இதனால் தேரோட்டம் தாமதமாகியது. மேலும், தேரின் அழகு குறைந்து போனதால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.
இதற்கிடையில் மின்கம்பத்தில் சிக்கிய தொம்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் இருவரின் தலையில் இரும்பு கம்பி அடித்ததால் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலங்காரம் செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த ஆண்டு மாற்றப்பட்டதாகவும், இந்த பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்காத காரணத்தினால் விபத்து நடந்ததாக தெரிகிறது.

