/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தாது மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
/
தாது மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 05, 2024 12:50 AM

தஞ்சாவூர்:நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட கடற்கரையோரங்களில், சில இடங்களில் சிலிக்கான் வகை தாது மணல் கிடைக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் தனிநபர் ஒருவர், தன் வயலில் சிலிக்கான் தாது மணல் எடுப்பதற்காக, அரசிடம் 2021ம் ஆண்டு அனுமதி பெற்றார்.
இந்த அனுமதியை வைத்து, மலை போல மணல் அள்ள துவங்கினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று, நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன், மீண்டும் மணல் எடுப்பதற்கான பணியை துவங்க, பொக்லைன் இயந்திரம், டிராக்டர்களுடன் ஆட்கள் வந்தனர். இதனால் ஆத்திரமடைந்து தம்பிக்கோட்டை கீழக்காடு, வடகாடு, மறவக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர்.
மணல் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை தோப்பு மாரியம்மன்கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமாறன், கனிமவளத் துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் உள்ளிட்ட அதிகாரிகள், மக்களிடம் பேச்சு நடத்தினர்.
அதில், வரும் அக்., 16ம் தேதி, பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பேச்சு நடத்தப்படும். அதுவரை மணல் அள்ளப்படாது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் போராட்டதை கைவிட்டு சென்றனர்.