ADDED : அக் 20, 2025 12:20 AM
பேராவூரணி: பேராவூரணி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டியராஜன், 39; தேங்காய் லோடு ஏற்றும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, பேராவூரணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, பைக்கில் மீண்டும் ஊருக்கு செல்லும் வழியில், பள்ளத்துார் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அங்கு மது போதையில் வந்த பள்ளத்துாரை சேர்ந்த செந்தில், 33, இரவில் பாண்டியராஜன் தனியாக இருப்பதை பார்த்து விசாரித்த போது, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, செந்தில் அங்கு கிடந்த கட்டையால், பாண்டியராஜன் தலையில் அடித்தார்.
இதில், பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், பாண்டியராஜன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து, செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனர்.