கிடப்பில் போடப்பட்ட மைக்ரோ மின் உற்பத்தி நிலையங்கள்
கிடப்பில் போடப்பட்ட மைக்ரோ மின் உற்பத்தி நிலையங்கள்
ADDED : ஆக 03, 2026 05:21 PM
கம்பம், ஆக. 4
முல்லைப் பெரியாற்றில் மைக்ரோ மின் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும், தேவைக்குமான இடைவெளி பெரிதாக உள்ளது. மின்சாரம் பல வழிகளில் உற்பத்தி செய்த போதும் சமீபத்தில் சோலார் மற்றும் காற்றாழை அமைப்பதில் ஆர்வம் காட்டப்படுகிறது. நீர் மின் உற்பத்திக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் மின் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும் மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றில் லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை 20 மைக்ரோ மின் நிலையங்கள் அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பே மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக நான்கு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டது. அவை BV 1, 2 , 3, 4 என அழைக்கப்படுகிறது.
12 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுகிறது. மீதமுள்ள மின் நிலையங்களை அமைப்பதில் நிதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. எனவே தனியார் பங்களிப்புடன் மின் நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்நிறுவனம் பணிகளை மேற்கொள்ளவில்லை. எனவே முல்லை பெரியாற்றில் மின் வாரியமே சிறு புனல் நீர் மின் நிலையங்கள் அமைக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
