ADDED : மே 26, 2026 11:51 PM
மூணாறு, மே 27-
தேவிகுளம் ஊராட்சி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இ-பாஸ் முறையை நடைமுறைபடுத்த ஆலோசித்து வருகிறது.
மூணாறில் வாரவிடுமுறை, பண்டிகை, சுற்றுலா சீசன் ஆகிய நாட்களில் பயணிகள் வருகை அதிகரித்து போகுவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்ய இயலாததால், இ-பாஸ் முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என தினமலர் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியிட்டு வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தேவிகுளம் ஊராட்சி இ - பாஸ் முறையை நடைமுறைபடுத்த ஆலோசித்து வருகிறது.
மூணாறில் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தேவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டுபட்டி, எக்கோ பாய்ண்ட், குண்டளை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் சிக்கி தவிக்க நேரிடுகிறது.
அதனை தவிர்க்கும் வகையில் மாட்டுபட்டி ரோட்டில் சுற்றுலா பஸ்கள் செல்ல தடை விதித்து, சிறிய ரக வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்லவும், இ- பாஸ் முறையை நடைமுறை படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என ஊராட்சி தலைவர் சரண்யா தெரிவித்தார்.
