தீவிரம் கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் நாற்றுகள் வளர்ப்பதில் பெரியாறு அணையில் நீர் மட்டம் குறைவால் வீணாகும் அபாயம்
தீவிரம் கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் நாற்றுகள் வளர்ப்பதில் பெரியாறு அணையில் நீர் மட்டம் குறைவால் வீணாகும் அபாயம்
ADDED : ஜூன் 24, 2026 03:50 PM

கூடலுார், ஜூன் 25-
பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளின் ஆலோசனையை பெறாமல் கூடலுார் பகுதியில் நெல் நாற்றுகள் வளர்ப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் இருப்போக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்ய முடிந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டாமல் அணை நீர் பிடிப்பில் நீர்வரத்தின்றி நீர்மட்டம் குறைந்து 112.90 அடியாக மட்டுமே உள்ளது. (மொத்த உயரம் 152 அடி), நீர்வரத்து வினாடிக்கு 182 கன அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பில் மழை இல்லை. நீர் இருப்பு 1375 கன அடியாகும்.
தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தால் மட்டுமே நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முடியும். இதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லாத போதிலும் கூடலுார் ஒழுகுபுளி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றாங்கால் அமைத்து நாற்றுக்கள் வளர்க்கும் பணியை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். கிணற்றுப் பாசனத்தில் நெல் விவசாயம் செய்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் அணை நீரை நம்பியுள்ள விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று நாற்றுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் நாற்றுகள் வீணாகும் அபாயம் உள்ளது. வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி பாதிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
