ADDED : மே 27, 2026 06:11 PM

பெரியகுளம், மே 28
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு அளவீடும் பணியை நீர் வளத்துறை அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.
இக் கண்மாய் 112 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. பல நுாறு கிணறுகளுக்கு ஊற்று கிடைக்கிறது. சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் கண்மாய்களில் நிரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுகிறது.
இந்த கண்மாய் பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. கண்மாய் மேற்கு பகுதியில் சிலர் பிளாட்டுகள் அமைத்து கண்மாய் இடத்தை ஆக்கிரமித்து வருவதாக புகார் எழுந்தது. சிலர் தோட்டங்களாக மாற்றி உள்ளனர்.
இந்நிலையில் நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ் தலைமையில் ஆக்கிரமிப்பு குறித்து முதல் கட்ட அளவீடு பணி துவங்கியது. குறுவட்ட நில அளவர்கள் கண்ணன், சக்திவேல் ஆகியோர் கண்மாய் பகுதியில் அளவீடு செய்தனர். நீர்வளத்துறையினர் கூறுகையில்: கண்மாய் அளவீடு செய்யப்பட்டு அதில் ஆக்கிரமிப்பாளர்களான தோட்டம் அமைத்துள்ளவர்கள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பி, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கற்கள் ஊன்றப்படும் என்றனர்.
--
