/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 19 பேர் காயம்
/
சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 19 பேர் காயம்
ADDED : செப் 16, 2025 05:00 AM
மூணாறு: இடுக்கி மாவட்டம், அடிமாலி அருகே கேரள அரசு சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் வார விடுமுறை நாட்களில் ' பேக்கேஜ்' அடிப்படையில் சுற்றுலா பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி வருகிறது.
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, வாகமண், இடுக்கி உட்பட பல வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி கண்ணூர் மாவட்டம் பையனூர் டெப்போவைச் சேர்ந்த பஸ் மூலம் 45 சுற்றுலா பயணிகள் செப்.13ல் தேக்கடி சென்றனர். பையனூரைச் சேர்ந்த டிரைவர் வினேத் பஸ்சை ஓட்டினார். தேக்கடி, இடுக்கி ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு பயணிகள் சொந்த ஊர் திரும்பினர். இடுக்கி - எர்ணாகுளம் மாநில நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே பனம்குட்டி பகுதியில் இரவு 9:30 மணிக்கு சென்ற போது ' பிரேக்' பழுதடைந்து பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. அதனை உணர்ந்த டிரைவர் மண் திட்டில் மோதி பஸ்சை நிறுத்தினார். அதில் சிறுவர்கள் உள்பட 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். வெள்ளத்தூவல் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு, அடிமாலியில் தாலுகா மற்றும் தனியார் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
விபத்து நடந்த பகுதியில் ரோட்டின் மறு புறம் ஆறு என்பதால் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு மண் திட்டில் மோதி பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.